19 June 2021
தலைவர்
தென்னிந்திய நடிகர் சங்கம்
சென்னை, தமிழ்நாடு
இந்தியா
அன்புடையீர்,
“The Family Man a Web Series” Amazon Prime இல் வெளியிடப்பட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். ஈழத் தமிழரின் வரலாற்றையும், எமது வரலாற்று சிறப்பு நிறைந்த தேச விடுதலைப் போராட்டத்தினையும் திரிவுபடுத்தி கொச்சைப்படுத்தும் திரைக் கதையும் உரையாடல்களும் எமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தில் நிகழ்ந்த இனப் படுகொலையை மூடி மறைத்து பயங்கரவாத இனமே அங்கு அழிக்கப்பட்டதாக நியாயப்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான காட்சிப்படுத்தல்களுடன் இத் தொடர் வெளி வந்துள்ளதானது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் மிகுந்த வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் போரின் பின் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் சிதறி வாழும் ஈழத் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஊடாக வாழ்வை நகர்த்தி செல்கின்றார்கள். ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறீலங்கா இனவாத அரசு தன் வன்கொடுமைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதையும், ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பை நீரூபிப்பதற்கும், நீதி கேட்டும் நாங்கள் பல்வேறு வழிகளில் சர்வதேச தளங்களில் உலகின் சட்ட திட்ட நியமங்கள் அடிப்படையில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உலகம் எங்களை பாதிக்கப்பட்ட இனமாக அடையாளப்படுத்த தொடங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் நாங்கள் உலக பயங்கரவாத அமைப்புக்களுடன் கைகோர்த்து செயற்படுவது போன்றும் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது போன்றும் தமிழர்களை மிக மோசமாக உருவகப்படுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதிலும் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்டி மற்றவர்களில் இருந்து அன்னியப்படுத்தவும் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மறைத்து நியாயப்படுத்துவதும் அதற்கு துணை போவதுமான ஒரு மோசமான பிரச்சார தந்திரமாக அத் தொடர் இருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். ஒரு தேசிய இன மக்களின் விடுதலையை சிதறடிப்பதற்கான நியாயங்களை உருவாக்குவதற்கு இந்த பயங்கரவாதம் என்கின்ற அரசியல் கருத்தியல் பயன்படுத்தப்படுகிறது. நாம் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்
சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் சமூகத்தையும், போராளிகளையும் தொடர்ச்சியான வன்முறைக் காட்சிகள் மூலமாக மனித உயிர்களைப் பொருட்படுத்தாத ஒழுக்கமற்ற பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முயல்கின்றது. மதுவருந்தல், புகைத்தல் பெண்களை பாலியல், தற்காப்பு ஆயுதங்களாக பயன்படுத்தல் தகாத வார்த்தைப் பிரயோகங்கள், பழிவாங்கும் உணர்வுகளுடன் அலைவது என எண்ணிலடங்கா வழிகளில் நீதியான விடுதலைப் போராட்ட வரலாற்றினை திரிவுபடுத்த பிரயத்தனப்பட்டிருக்கின்றார்கள்.
இது ஒரு கற்பனை கதை என்று பொறுப்புக் கூறலில் இருந்து படத் தயாரிப்பாளர்கள் விடுபட முடியாது. “ஈழத் தமிழர்கள்”, “பருத்தித்துறை”, “ஈழம்”, “வட இலங்கை” என்ற பதங்களை குறிப்பிட்டிருக்கின்றார்கள். காட்சி அமைப்புக்கள் கூட ஈழத்தில் நிகழ்ந்த இறுதி போரை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இது தீர்க்கமாக யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொடர் என்பது தெளிவாக தெரிகின்றது. எங்கு போனாலும் எவ்வளவு காலம் கடந்தாலும் ஈழத் தமிழன் என்பவன் பயங்கரவாதி தான் என்று உலக நாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் ஒரு கருவியாகவே இத் தொடர் அமைகின்றது.
ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை எதிர்த்து உலக அரங்கத்தில் நீதி வேண்டி நிற்கின்றோம். கடந்த 12 வருடங்களாக அமைதியாக ஜனநாயக வழியில் நீதிக்காக போராடும் எங்களை மீண்டும் மீண்டும் எதற்காக குறி வைக்கின்றீர்கள் என வினாவுகின்றோம்? இன அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை முடிந்து விட்ட பிறகும் கூட தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு கருத்தியல், கோட்பாட்டியல், அரசியல் யதார்த்தமாகவும், அது சிங்கள-பௌத்த-தேசியவாத சக்திகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும் தொடர்ந்தும் தமிழர்களை மற்றும் தமிழ் அடையாளங்களை பயங்கரவாதத்தின் நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும் உட்படுத்தி வரும் அந்த பொதுப் புத்தி உருவாக்கல் என்பது மேலாதிக்க பேரினவாத தமிழர்களுக்கு எதிரான பகை சக்தியினுடைய தேவையாக இருக்கிறது. அதனைத்தான் இந்தத் தொடர் வெளிப்படுத்த முனைகின்றது என்பது தொடரினை முழுமையாகப் பார்த்த பின்னர் இப்போது நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
நாங்கள் துன்பப்படும் காலங்களில் எல்லாம் தமிழக மக்கள் எங்களுடன் நின்றிருக்கின்றார்கள், ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அனுதாபிகளாக, போராட்டம் செய்பவர்களாக, குரல் கொடுப்பவர்களாக எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கின்றார்கள். இன்றும் அதே உணர்வுடன் எம்முடன் இணை பிரியாது இருக்கின்றார்கள். இதில் திரைப்படத் துறையினரின் பங்கும் கணிசமானது. வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவதிலும் கணிசமான வருவாய் ஈட்டியதிலும் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் பங்கு எண்ணிலடங்காது. ஈழத் தமிழருக்கும் உங்களுக்குமான உறவு என்பது எப்போதும் நல்லுறவுடன் தொடர வேண்டும். எனவே தமிழ் நடிகர்களே தமிழனை இழிவுபடுத்தும், கொச்சைப்படுத்தும், அல்லது போராட்ட வரலாற்றினை திரிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் வராமல், திரைக்கதை எழுதாமல் அல்லது அவ்வாறான காட்சிகளில் நடிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகர் சங்கத்திலிருந்து வெளிவருமானால் அது எங்கள் இனம் பட்ட வலிக்கான ஆறுதல் மருந்தாக இருக்கும் என்பதுடன் தமிழ் மக்களிற்கெதிரான தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்துவதில் தொடர்ந்தும் தமிழர்களுக்கான நீதியையும், உரிமையையும் பெற்றுக் கொள்ள எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Criminalising Tamil Victims of Genocide _ Family Man 2 SIAA
நன்றி.
Contact details:
Australian Tamil Congress (ATC) – T: +61 300 660 629, Email: Mano_manics@hotmail.com
British Tamils Forum (BTF) – T: +44 (0) 7814 486087, Email: info@britishtamilsforum.org
Irish Tamils Forum (ITF) – T: 00353 899592707, Email: irishtamilsforum@gmail.com
La Maison du Tamil Eelam (MTE) – T: +33 652725867, Email: mte.france@gmail.com
Norwegian Council of Eelam Tamils (NCET) – T: +47 90 64 16 99, Email: stevenpush.k@gmail.com
National Council of Canadian Tamils (NCCT) – T: +1.416.830.7703, Email: krishanthy@ncctcanada.ca
Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa) – Email: pregasenp@telkomsa.net
United States Tamil Action Group (USTAG) – T: +1(202) 595 3123, Email: info@ustag.org
Comments are closed.