சிறிலங்காவில் தொடரும் தமிழின அழிப்பினை ஆதார பூர்வமாக சர்வதேச
கட்டமைப்புக்களில் பதிவிடும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உலகளாவியவேலைத்திட்டம்-முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அறிவிப்பு

இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சமூகத்தினரால் கைவிடப்பட்ட, ஈழத்
தமிழர்கள் யாருமற்ற அனாதைகளாக , சிங்கள அரசினால் பல்லாயிரக் கணக்கில்
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு
உட்படுத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் முள்ளிவாய்க்கால் மண்ணையும்
கடலையும் செந்நிறம் ஆக்கி, மானுட வரலாற்றின் கருப்பு பக்கங்களை
உருவாக்கியதனை உலகின் முன் வைத்து நீதி கோரும் குரல்களின் சங்கம தினமாகும்.

இலங்கை தீவானது 1948ஆம் ஆண்டில், பிரித்தானியாவிடம் சுதந்திரம் அடைந்த
தருணத்தில் இருந்து சிறிலங்கா அரசினால் ஆரம்பிக்கப்பட்ட, தமிழின அழிப்பானது,
கடந்த 75 வருடங்களாக இடையறாது தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தமிழ்
மக்களின் மேல் கட்டவிழ்க்கப்பட்டு, இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது நவீன
உலகின் மாபெரும் அவலமாகும். இந்த இனப்படுகொலைகளின் உச்சமாக 2009 ஆம்
ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட
தமிழ் மக்கள் சிறிலங்காவின் சிங்கள அரசினாலும் அவர்களது நட்பு சக்திகளின்
துணையோடும், தமிழினப்படு கொலையை அரங்கேற்றியதன் மூலம், மானுட தர்மம்
இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றது.

இப் பேரவலம் நிகழும் போதும் சர்வதேசத்தில் உள்ள சகல நாடுகளும், ஐக்கிய
நாடுகள் சபை போன்ற நிறுவனங்களும், மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களும்
வாய்மூடி மௌனிகளாக மறுபுறம் திரும்பி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித
அவலத்தை பொருட்படுத்தாத வன்கொடுமையை தமிழ் மக்கள் எக் காலத்திலும்
மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

2009இல் யாருமற்ற அனாதைகள் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், கடந்த 14
வருடங்களாக பிரித்தானிய தமிழர் பேரவையும், அவர்களுடன் கூட்டாக
தாயகத்திலும், மற்றும் உலக நாடுகளிலும் உள்ள பல அமைப்புகளும், தற்போதைய
உலக ஒழுங்குகளுக்கு அமைவாக ஜனநாயக வழியில், எவ்வித விட்டுக்
கொடுப்புமின்றி, ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டின்
அடிப்படையில், ஈழத் தமிழ் மக்களுக்கு தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற
வழிமுறையில் நிரந்தர தீர்வு ஒன்றை உருவாக்குவதற்கும், ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையின் மூலம் நீதியை நிலைநாட்டி குற்றவாளிகளை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழ்  மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவும், எவ்வித இடைவெளியுமின்றி
தளர்வுமின்றி உறுதியாக சர்வதேச நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் பல உப
அமைப்புகளை நோக்கியும் கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக அரசியல், ராஜதந்திர,
மற்றும் பல்பரிமாண தொடர்பாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் எங்களினால் தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாக முதலில் உள்நாட்டு பொறிமுறை
மூலம் போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய
விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஆரம்பத் தீர்மானங்கள், தொடர்ந்து
வந்த காலங்களில் படிப்படியாக மாற்றப்பட்டு , கலப்பு பொறிமுறை
பரிந்துரைக்கப்பட்டு, பின்பு அதுவும் கைவிடப்பட்டு தற்போது உலகலாவிய
நியாயாதிக்க கோட்பாட்டின் (Universal Jurisdiction) அடிப்படையில், பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களுக்கு, மூன்றாம் நாடுகளில் நீதியை வழங்கக்கூடிய பொறிமுறைகளை
நோக்கிய தீர்மானங்களாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மனித உரிமை பேரவை இறுதியாக நிறைவேற்றிய 51/1
தீர்மானப்படி இலங்கையில் இடம் பெற்ற சகல மனித உரிமை மீறல்களும் குற்றம்
நிகழ்ந்த கால வரையறை கட்டுப்பாடுகளின்றி திரட்டப்பட்டு குற்றவியல்
விசாரணைக்கு ஏதுவான கோப்புகள் உருவாக்கும் பொறுப்பு ஐ.நா. மனித உரிமை
பேரவையின் கீழ் விசேடமாக உருவாக்கப்பட்ட ஒரு பணிக் குழுவிடம்
கையளிக்கப்பட்டுள்ளது. 1948 தொடக்கம் தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியாக
கட்டவிழ்த்து விடப்பட்ட சகல குற்றவியல் விவரங்களையும் சான்றுகளையும் மேற்படி
பணிக் குழுவிடம் சமர்ப்பித்து இந்த சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை மேலும்
வலுப்படுத்தி, தமிழினப்படுகொலையினை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த
சட்டரீதியிலும், அரசியல் ரீதியிலும், சர்வதேச கருத்து உருவாக்க ரீதியிலும்
உறுதிப்படுத்துவது நம் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.

எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது தேவையான உண்மையான
சாட்சியங்களை சேகரித்துக் கொடுப்பதை எமது தலையாய கடமையாக காலத்தின்
கட்டாயமாக உணர்ந்து செயல்படும் நேரம் இதுவாகும்.
14 ஆண்டுகளின் முன் 2009 மே மாதத்தில் லண்டன் மாநகரின் பாராளுமன்ற
சதுக்கத்தில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை சிறிலங்காவிற்கெதிரான சர்வதேச
சுயாதீன விசாரணை வேண்டும் என்று ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலித்தது. இன்று அது
உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

எமக்கான காலம் ஒருநாள் உருவாகும். அன்று சர்வதேச சமூகம் எமக்கு நடைபெற்ற
இனப்படுகொலையின் உண்மையை ஏற்றுக்கொள்ளும். சமாந்தரமாக தாயக
விடுதலைக்கான கதவுகள் திறக்கும். எங்கள் காலத்திலோ அடுத்த சந்ததியினரின்
காலத்திலோ அது நிறைவேறும். அது வரை நாங்களும் எம் இளையோரும்
உறுதியுடனும் செயல் திறமையுடனும் பணிகளை தொடர்வோமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அறிவிப்பு

Please follow and like us:
error

Comments are closed.