செம்மணிப் புதைகுழியும் இயற்கை பேரிடர் கோட்பாட்டு மடைமாற்றமும்!

சுயாதீன சர்வதேசத் தடயவியல் விசாரணைக்கு கோரிக்கை

யாழ்ப்பாணம், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரால் ஏற்பட்டிருக்கலாம் என்ற பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் கருத்து குறித்துப் பிரித்தானியத் தமிழர் பேரவை தனது ஆழ்ந்த விசனத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் குடியேற்றக் காலத் தொல்லியல், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் மற்றும் சுற்றுச் சூழல் தொல்லியல் ஆகிய துறைகளிலேயே பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் முதன்மை நிபுணத்துவமும் வெளியிடப்பட்ட ஆய்வுகளும் அடங்கியுள்ளன என்பதை கல்விசார் பதிவுகளும் சுயவிவரச் சுருக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன; மாறாக, அவர் தடயவியல் தொல்லியல் (Forensic Archaeology) அல்லது தடயவியல் மானுடவியலில் (Forensic Anthropology) நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. இருப்பினும், இலங்கையில் நடைபெற்ற புதைகுழி விசாரணைகளில் அவர் முதன்மைத் தொல்லியல் அதிகாரியாக அடிக்கடி நியமிக்கப்பட்டுள்ளார். 

குழந்தைகளின் எச்சங்கள் என நம்பப்படுபவை உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், யூகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள் உண்மையைத் தேடும் முயற்சியை சீர்குலைக்கலாம், சாட்சியங்களின் நம்பகத் தன்மையைச் சமரசம் செய்யலாம் அல்லது சட்டவிரோதக் கொலைகள் பற்றிய சாத்தியக்கூறுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பலாம் என்று BTF கவலை தெரிவிக்கிறது. எந்தவொரு கோட்பாடும் விளக்கமும் வலுவான, சுயாதீனமாக சரி பார்க்கக் கூடிய சாட்சியங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

செம்மணி கூட்டுப் புதைகுழியுடன் தொடர்பான விடயங்கள் இன்னும் தீர்வு காணப்படாத நிலையிலேயே உள்ளன. அத்தகைய ஒரு இயற்கை பேரழிவு நடந்தது என்பதை நிலைநாட்டி, அதற்கும் அந்த இடத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும், சுயாதீனமாக சரி பார்க்கப்பட்ட வரலாற்று மற்றும் அறிவியல் சான்றுகள் இல்லாமல், ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு கருதுகோள் உருவாவது, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

உறுதிப்படுத்தப்படாத இயற்கைப் பேரிடர் கதைக் களமானது, இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அல்லது சாத்தியமான குற்றப் பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவோ பயன்படுத்தப்படலாம் என்று BTF ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

ஆதாரங்களைத் திரிக்க, மறைக்க, ஒருதலைப்பட்சமாக முன்வைக்க அல்லது சிதைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறான ஆழமான விடயங்களின் தீவிரத் தன்மைக்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன; வெறும் அனுமானங்களோ அல்லது முன்கூட்டிய எழுந்தமானமான முடிவுகளோ போதாது.

தொற்றுநோய் அல்லது இயற்கை பேரிடர் குறித்து கருத்து முன்வைப்பதானது, வேண்டுமென்று திட்டமிட்ட முறைகேடு நடப்பதாக BTF கூறவில்லை. அதே போல், வலுவான மற்றும் சுதந்திரமாகச் சரி பார்க்கக் கூடிய ஆதாரங்கள் இல்லாதவரை, இத்தகைய கருதுகோளை இறப்புகள் மற்றும் அடக்கம் செய்தல் நிகழ்வுகளுக்கான விளக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கருதுகோளை முன்வைப்பவர்கள், அதனைத் துல்லியமான அறிவியல் ஆய்வு மற்றும் நம்பகமான வரலாற்று ஆவணங்கள் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளிப் பைகள், பால் புட்டிகள், பொம்மைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளுடன் 583 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை, இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களின் இறப்புத் தேதிகள் மற்றும் சூழ்நிலைகள், மற்றும் அவர்களின் எச்சங்கள் ஏன் இந்த இடத்தில் புதைக்கப்பட்டன என்பதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.  

முதன்மை அறிக்கையின்படி, மதிப்பிடப்பட்ட 41% பேர் குழந்தைகளும் 22% பேர் கைக்குழந்தைகளும் ஆவர். கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் இத்தகைய உயர் விகிதாச்சாரம் அவர்களின் இறப்புச் சூழ்நிலைகள் குறித்தும், முழு குடும்பங்களும் அல்லது குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனமான விசாரணை அவசியமாவதாக மனித உரிமைகள் அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன. ஆயினும், இந்த மக்கட்தொகை சார்ந்த கண்டுபிடிப்புகள் மட்டும் இறப்புக்கான சூழ்நிலைகளையோ காரணங்களையோ முழுமையாக நிறுவ முடியாது. 

2002–2003 ஆம் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செம்மணி தொடர்பான அறிக்கைகள் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள புதைகுழிகள் குறித்த இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCSL) கடந்தகால மற்றும் சமீபத்திய மதிப்பீடுகள், அடக்கம் செய்யும் முறைகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளன. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களை ஒழுங்கற்ற குவியல்களாகப் புதைப்பது இந்து அல்லது உள்ளூர் கலாச்சார இறுதிச் சடங்குகளுக்கு முற்றிலும் முரணானது என்று HRCSL அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “அந்தப் புதைகுழிகள் சட்டவிரோதமானவை மற்றும் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளின் அடிப்படையில் செய்யப்பட்டதற்கான நியாயமான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

1990-களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற இராணுவ ஒடுக்குமுறைகள் மற்றும் பெருமளவிலான வலிந்து காணாமல் போகச் செய்தல்கள் உள்ளிட்ட, ஆயுத மோதலின் வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு இந்த விடயங்கள் ஆராயப்பட வேண்டும். இருப்பினும், மக்கள் தொகை சார்ந்த இந்தத் தரவுகளைக் கொண்டு மட்டும், மரணத்திற்கான சூழல்களையோ அல்லது காரணங்களையோ உறுதிப்படுத்த முடியாது.

தொல்லியல் அறிக்கை அதன் சாட்சியங்கள், முறையியல் (methodology), வரம்புகள் (limitations) மற்றும் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். அதன் அடிப்படைப் பதிவுகள், அகழ்வாராய்ச்சி ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்களின் பட்டியல்கள், மண் அடுக்கு ஆய்வுக் குறிப்புகள் (stratigraphic observations) மற்றும் தொடர்புடைய பிற பொருட்கள் ஆகியவை, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டு, சுயாதீன நிபுணர் பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

தீர்க்கப்படாத காணாமல் போனோர் வழக்குகள், சர்ச்சைக்குரிய விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை வழங்கத் தவறிய இலங்கையின் நீண்ட வரலாறு பொதுமக்களின் நம்பிக்கையை வெகுவாகச் சீர்குலைக்கிறது என்பதில் BTF குறிப்பாக அக்கறை கொண்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பதில்களுக்காக பல தசாப்தங்களாகக் காத்திருக்கிறார்கள். சுயாதீனமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது நிலைத்து நிற்க முடியாத விளக்கங்களை, சம்பந்தப்பட்டவர்கள் முன்வைக்கக் கூடாது.

இயற்கைப் பேரிடருக்கான (natural disaster ) சாத்தியக்கூறு சோதிக்கப்பட வேண்டுமே தவிர அனுமானிக்கப்படக் கூடாது. சட்டவிரோதக் கொலைக்கான சாத்தியக்கூறு விசாரிக்கப்பட வேண்டுமே தவிர நிராகரிக்கப்படக் கூடாது. முக்கியமாக, சான்றுகளும் ஆதாரங்களும் எந்தவிதமான இடையூறுகளோ, மறைமுகச் செயல்களோ, மறைப்புகளோ அல்லது முறைகேடான மாற்றங்களோ செய்யப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

BTF பின்வரும் அவசர நடவடிக்கைகளுக்குக் கோரிக்கை விடுக்கிறது:

  1. சுயாதீன, சர்வதேச அளவில் தலைமை தாங்கப்படும் விசாரணை: சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி அகழ்வாராய்ச்சிகளை நடத்துவதற்கும், சாட்சியப் பாதுகாப்புச் சங்கிலியைப் பேணுவதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அங்கீகாரம் பெற்ற சர்வதேச தடயவியல் மானுடவியலாளர்கள், நோயியலாளர்கள் மற்றும் சட்ட நோக்கர்களை செம்மணி, மண்டைதீவு மற்றும் பிற செயற்பாட்டில் உள்ள தளங்களுக்கு நேரில் அனுப்பி வைக்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்தாலும் அல்லது தனிநபராலும் தலையீடு இல்லாமல் அனைத்து சாத்தியமான விளக்கங்களையும் மற்றும் குற்றச் செயல்களுக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதற்கு அர்த்தமுள்ள அதிகாரமும் பொருத்தமான நீதித்துறை மேற்பார்வையும் கொண்ட நம்பகமான விசாரணைப் பொறிமுறையை நிறுவ வேண்டும். 
  2. தொல்லியல் அறிக்கையின் சுயாதீன மறுஆய்வு: தடயவியல் தொல்லியல் வல்லுநர்கள் (archaeologists), மானுடவியலாளர்கள் (anthropologists), நோயியலாளர்கள் (pathologists), மனித உரிமைகள் ஆய்வாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய நிபுணர்களை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்களின் பன்முக துறைசார் குழுவொன்றை நியமித்து, இந்த அறிக்கை, அதன் துணைச் சாட்சியங்கள், அதன் முறையியல் (methodology) மற்றும் அதன் முடிவுகளின் வரம்புகளை மறுஆய்வு செய்ய வேண்டும். 
  3. காலவரையறைக்குட்பட்ட விசாரணைச் கட்டமைப்பு: தெளிவான காலக்கெடு, வெளிப்படையான அடைவு மட்டங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை நிர்ணயிக்க  வேண்டும்.சர்வதேச வல்லுனர்களின் சுயாதீன கண்காணிப்பு, விசாரணையானது, பொதுமக்களின் நம்பிக்கையையும் பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தும் மற்றொரு நீண்ட செயல்முறையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  4. சர்வதேச தடயவியல் தரநிலைகளுக்கு இணங்குதல்: சட்டவிரோத மரணம் தொடர்பான விசாரணைக்கான ஐ.நா. மினசோட்டா நெறிமுறை (UN Minnesota Protocol) மற்றும் பிற பொருந்தக் கூடிய சர்வதேச தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து ஆய்வுகளும், சான்றுகளை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், அறிவியல் பகுப்பாய்வு, சான்றுகளின் தொடர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான சரிபார்ப்பு ஆகியவற்றுக்கான ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

    1. பாதிக்கப்பட்டவர்களின் சுயாதீன அடையாளம் காணல்:
      • விரிவான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம்: ஐ.நா. அமைப்புகள், இலங்கை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய சுதந்திர வல்லுநர்களுடன் ஒருங்கிணைந்து, பதிவு செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட, பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும் மற்றும் குறுக்குச் சரிபார்க்கப்பட்ட தரவுத் தளத்தை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களின் தகவலறிந்த ஒப்புதலுக்கு உட்பட்டு, அதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், தேதிகள் மற்றும் இடங்கள், அத்துடன் அடையாளம் காணும் முயற்சிகளில் பங்கேற்க விரும்பும் இரத்த (biological) உறவினர்களின் தொடர்பு விவரங்களும் இடம்பெற வேண்டும். இந்தத் தரவுத் தளமானது, கிடைக்கப் பெற்ற பதிவுகள் மற்றும் கூட்டுப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சான்றுகளுடன் முறையான ஒப்பீட்டை எளிதாக்க வேண்டும்.
      • சர்வதேச மேற்பார்வையின் கீழ் DNA தரவு வங்கி: இலங்கை முழுவதும் மற்றும் தமிழ் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒப்புதல் அளிக்கும் இரத்த உறவினர்களிடமிருந்து சுயாதீன சர்வதேச மேற்பார்வையின் கீழ் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். இரகசியத் தன்மை, அறிந்த ஒப்புதல், தரவுப் பாதுகாப்பு மற்றும் மரபணுத் தகவல்களின் சட்டபூர்வ பயன்பாடு ஆகியவற்றிற்கான வலுவான பாதுகாப்புகளுடன், ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாட்டில் முறையே சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களால் மரபணு ஒப்பீடுகள் நடத்தப்பட வேண்டும். 

 

  • ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக் கோள் மற்றும் புவிசார் பகுப்பாய்வுத் (satellite and geospatial analysis programme) திட்டம்: 

 

      • ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட, தொடர்புடைய வரலாற்றுச் செயற்கைக் கோள் படங்கள், வான்வழிப் புகைப்படங்கள், நிலப்பரப்பு தரவுகள், நிலப் பயன்பாட்டுப் பதிவுகள் மற்றும் கிடைக்கக் கூடிய பிற மூலங்களை ஈர்க்கும் சுயாதீன செயற்கைக் கோள்–படங்கள் மற்றும் புவிசார் பகுப்பாய்வுத் திட்டத்தை நிறுவ வேண்டும். 
      • இந்தத் திட்டம், காலப்போக்கில் அந்த இடத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து, சாத்தியமான கூடுதல் புதைவிடங்களைக் கண்டறிந்து, சான்றுகள் அனுமதிக்கும் பட்சத்தில் வாகனங்கள் புறப்பட்ட மற்றும் கடந்து சென்ற இடங்கள் உட்பட அவற்றின் நடமாட்டங்களையும் வழித் தடங்களையும் கண்டறிந்து, கிடைக்கப் பெற்ற இடஞ் சார்ந்த சான்றுகள் போட்டி கருதுகோள்களுடன் ஒத்துப் போகின்றனவா என்பதை மதிப்பிட வேண்டும். கண்டறியப்பட்ட அனைத்து முடிவுகளும் சுயாதீனமாகச் சரிபார்க்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, சாத்தியமான நீதித்துறை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வடிவத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

  • சாட்சியங்களைப் பாதுகாத்தல் மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல்:

 

    • அகழ்வாராய்ச்சித் தளத்தைப் பாதுகாத்து, அனைத்து மனித எச்சங்கள், கலைப்பொருட்கள், புகைப்படங்கள், மாதிரிகள், அகழ்வாராய்ச்சிப் பதிவேடுகள், அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணக் காப்பகங்களைப் பாதுகாக்க வேண்டும். அச்சுறுத்தல், குறுக்கீடு, சான்றுகளை அழித்தல் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் ஆகியவற்றிற்கு எதிராக சுதந்திரமான கண்காணிப்பையும் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டும். சாட்சிகள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்குதல் ஆகியவற்றிலிருந்து தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
  1. தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடர் கருதுகோளைச் சரிபார்த்தல்: 
    • பொது சுகாதார அறிக்கைகள், இறப்புப் புள்ளிவிவரங்கள், இறப்புச் சான்றிதழ்கள், கல்லறை மற்றும் அடக்கம் செய்யும் பதிவுகள், சமகால நிர்வாகப் பதிவுகள், வரலாற்று வரைபடங்கள் மற்றும் கிடைக்கக் கூடிய பிற ஆவணங்கள் உள்ளிட்ட தொடர்புடைய வரலாற்றுப் பதிவுகளை உருவாக்குவதற்கும் சுயாதீன பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும். 
    • முன்மொழியப்பட்ட எந்தவொரு விளக்கமும் தொல்லியல், தடயவியல், வரலாற்று மற்றும் தொற்றுநோயியல் சாட்சியங்களுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கிடைக்கக் கூடிய சாட்சியங்களின் கடுமையான பரிசோதனை இல்லாமல் தொற்றுநோயோ அல்லது இயற்கைப் பேரிடரோ ஏற்றுக் கொள்ளப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ கூடாது. 
  2. பொறுப்புக்கூறல் மற்றும் நீதிபெறும் உரிமை:
    • குற்றவியல் பொறுப்பை நிலைநாட்டக் கூடிய அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்படுவதையும், தகுதியுடைய மற்றும் சுதந்திரமான சர்வதேச நீதித்துறை அதிகார அமைப்புகளுக்கு அவை கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
    • ஆதாரங்கள் குற்றச் செயலை உறுதிப்படுத்தும் பட்சத்தில், அச் செயலுக்குப் பொறுப்பானவர்கள், அவர்களின் பதவி அல்லது அவர்கள் சார்ந்த நிறுவனம் எதுவாக இருந்தாலும், சர்வதேச சட்டத்திற்கு இணங்க நியாயமான நடைமுறைகளின் மூலம் பொறுப்புக் கூறச் செய்யப்பட வேண்டும்.

சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான அவசர சோதனை

இவ்வளவு பெரிய அளவிலான ஒரு கண்டுபிடிப்பு குறித்த விசாரணையின் வரம்பு, தரநிலைகள் மற்றும் வேகத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இலங்கை அரசாங்கத்திடம் மட்டும் விட்டு விடக் கூடாது. முறையான விசாரணையை நடத்துவதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடோ அல்லது ‘பாம்-பல்ஸ் கார்பன்-14 டேட்டிங்‘ (bomb-pulse carbon-14 dating) போன்ற சிறப்பு அறிவியல் வசதிகளோ அந்த நாட்டில் இல்லை.

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தொடர்புடைய சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம், வெறும் கவலை தெரிவிப்பதோடு நின்று விடாமல், உண்மையைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் கண்டறியக் கூடிய ஒரு சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

செம்மணி கூட்டுப் புதைகுழி விவகாரமானது, ஆதாரங்களுக்குப் பதிலாக முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படும் ஒரு சூழலாகவோ அல்லது காலம் செல்லச் செல்ல நீதி மறுக்கப்படும் ஒரு நிகழ்வாகவோ மாறிவிடக் கூடாது.

அனைத்து ஆதாரங்களையும் உடனடியாகப் பாதுகாக்குமாறும், தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளுமாறும், என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், ஆதாரங்கள் சுட்டிக் காட்டும் நபர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் கூடிய வெளிப்படையான சர்வதேச விசாரணை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் BTF வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையும், மாண்பும், நீதியும் பெறத் தகுதியானவர்கள். சாட்சியங்கள் சமரசம் செய்யப்படக் கூடாது. பொறுப்புக்கூறல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படக் கூடாது. 

செம்மணிப் புதைகுழியும் இயற்கை பேரிடர் கோட்பாட்டு மடைமாற்றமும்

Please follow and like us:
error

Comments are closed.