பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்

இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்தார்கள்.

தொடர்ந்து திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கான சிறப்புக் காணொளி ஒன்று திரையிடப்பட்டது. இக் காணொலியில் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதையும், இவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்குமிடையேயான நீண்ட கால உறவு குறித்து விவரணப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் செல்வி. சர்மிளா வரதராஜ் அவர்கள் உரையாற்றினார். இவர்  மிக குறைந்த வயதில் வொன்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

“பல்லின பாரம்பரியத்தினை அடிப்படையாக கொண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்து சனநாயக பாராளுமன்ற “ஒன்றிய” அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மாறாக சிறிலங்கா தன்னை தானே சிதைத்து கொள்ளும் ஒற்றை இன, ஒற்றை மத, ஒற்றை மொழி நாடாக சம உரிமைகளை மறுதலித்து, தொடரும் வன்முறை சுழற்சி, படுகொலைகள் என 30 ஆண்டு கால யுத்தத்தினை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அதனை வங்குரோத்து (Bankruptcy)  நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை,  ஐ.நா. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுடனும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதுடன் ஐ.நா.வில் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை தற்போது இருக்கும் நிலைக்கு முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) உறுப்பு நாடுகள், உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (SLAP) அமைத்து சாட்சியங்களை திரட்டி வருகின்றது. குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை. BTF ஒரு குற்றவியல் விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான அடுத்த படிகளில் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா அண்மையில் விடுத்த அறிக்கையில், “தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்” என குறிப்பிட்டிருந்தது.

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில், சுதந்திரமாக வாழக் கூடிய எதிர்காலம் உருவாகும் வரை BTF உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்” என சர்மிளா வரதராஜ் தன் உரையில் குறிப்பிட்டு இருந்தார். (Video link https://youtu.be/7DHaElVzcDE)

மண்ணும் மக்களும் அவர் தம் சமூக, பொருளாதார, அரசியல் பலம் தாயகத்தில் நாளாந்தம் திட்டமிட்ட சிதைவுக்குள்ளாக்கப்பட்டு மீள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இதன் முழு பரிமாணத்தையும் ஆராய்ந்து அதற்கான சரியான மூலோபாயத்தின் அடிப்படையில் என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற விபரங்களை சுருக்கமாக துல்லியமான புள்ளி விபரங்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவி குமாரின் உரை அமைந்தது. குறிப்பாக மீள் குடியேற்றம், மீள் கட்டுமானம், சமூக பொருளாதார வலுவூட்டல், தாயக மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு, அதற்காக வெளி சக்திகளின் மூலம் பிரயோகிக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கும் பொறிமுறைகள் என்பன ஒரு வழி வரைபடமாக முன் வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டு வரும் தாக்குதல் மற்றும் ஈழத் தமிழர்களின் குறைவடைந்து வரும் இன விகிதாசாரம் பற்றிய ஓர் காணொலியும் காட்சிப்படுத்தப்பட்டமையானது இந்நிகழ்வின் ஓர் சிறப்பம்சமாகும். (Video link https://youtu.be/Prc65ZhXp_0)

சர்வதேச சட்டங்களும் ஒப்பந்தங்களும் அவற்றை மீறிய சிறிலங்காவின் போர்க் குற்றங்கள், இனவழிப்பு நடவடிக்கைகளும்  குறித்து உரையாற்றிய சட்டவாளரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிருவக உறுப்பினர்களில் ஒருவருமான கலாநிதி நகுலேசன் அவர்கள் மேற்படி அட்டூழிய குற்றங்களை ஆவணப்படுத்தி சர்வதேச பொறிமுறைகளை பயன்படுத்தி சட்டரீதியாக தீர்வு காணும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முயற்சிகளை விபரித்திருந்தார். (Video link https://youtu.be/KhOL7eHWkHk)

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் உரை நடைபெற்றது. இந்திய – ஈழத்தமிழர் உறவுப்பாலமானது செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே இந்திய – ஈழத்தமிழர் இடையே உறவானது, உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக கலாச்சார ரீதியாக இணைந்திருக்கக் கூடிய பாதைதான், இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாதை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கக் கூடிய பிரச்சனையானது, பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சி பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வந்திருக்கும் வகையில், ஒரு நீண்ட காலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வு என்பதை யாராலும் முன் வைக்க முடியாது. ஆனால் இதற்கான தீர்வு ஒரு தொடர்ச்சியான முயற்சி. 15 ஆண்டுகளுக்கு மேலாக BTF வேலை செய்து கொண்டிருக்கிறது. இதே சமயத்தில் உலகத்திலே பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் எவ்வாறு தங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறையின் கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானது. ஒரு நாடானது பல்வேறு தரப்பட்ட இராஜதந்திரங்களுடன் தான் செயற்படும்.

2014இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, அவர் யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன் என்று அந்த நாட்டு பாராளுமன்றத்திலே உரையாற்றிய ஒரு இந்தியப் பிரதமர்.

யாழ்ப்பாணத்திலே ‘Multi Cultural Center’ முழுவதும் இந்திய அரசின் சார்பாக கட்டி முடிக்கப்பட்டது. இரயில்வே திட்டங்களுக்கான நிதி உதவி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி உதவி, Power Projects, மற்றும் சிறப்பு நிதி உதவி திட்டங்கள், Soft Loan போன்றவற்றை இந்திய அரசானது இலங்கை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது உதவியது. இலங்கை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தால் அங்கே தவிக்கப் போவது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தான். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிரதமர் முனைந்து கொண்டிருக்கிறார்.

மேலும், ‘வான்வழி’, ‘கடல் வழி’ தொடர்பானது 40 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியில், யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி வான் வழி விமான சேவை நடைபெற்றது. ‘கடல் வழி’ போக்குவரத்து பற்றிய தகவல்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே BTF ஐ சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் டெல்லி வந்த போது, அமைச்சர்களைச் சந்தித்த பின்னர்,  எப்படி படகு சேவையை ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்த பின், அமைச்சர்களுடன் பேசி, புதுச்சேரியிலிருந்து படகு போக்குவரத்தை தொடக்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான். இன்று நாகபட்டிணத்திலிருந்து பயணியர் போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட இந்த பயணங்கள் போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை செயல்படுத்துவதோடு மட்டுமின்றி இலங்கையிலும் அதைச் செயற்படுத்தியது. மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் இந்திய அரசு சிறிது சிறிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகள், அந்த நாட்டிலே அவர்கள் சம உரிமையோடு வாழ்வதற்கான அங்கீகாரமும், அவர்களுக்கென புதிதாக உருவாக்கப்பட வேண்டிய தொழில் வாய்ப்புகளும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்ற தெளிவு, உல‌க நாடுகளில் இருக்கக்கூடிய அமைப்புகளின் உதவிகள் போன்ற பல்வேறு நிலையில், நீங்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் அடையாளம், எங்கள் மக்களின் எதிர்காலமென தொடர்ந்து பணிகளைச் செய்கிறீர்கள். ஒரே குரலாக இது இருக்க வேண்டும். ஒரே பாதையை நோக்கியதாகவும் இருக்க வேண்டும். குரலில்லாத மனிதர்களுக்காக வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களுக்காக, வாழ்க்கையின் நம்பிக்கைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் பயணியுங்கள். ஈழத் தமிழர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் நிறைந்து தம் மொழியைக், கலையை, சிறந்த சிந்தனையை, தன் நிலையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். (Video link https://youtu.be/IVmvAY98Ulc)

பின் திருமதி வானதி சீனிவாசன் அவர்களிடம் இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் எழுதப்பட்டு, கேட்கப்பட்ட வினாக்களுக்கு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தெளிவாகவும் பதிலளித்து இருந்தமையானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், வரலாற்றில் முதன் முறையாக கடல் படை ஒன்றினை கட்டி எழுப்பி கடல் வழியே சென்று தூர தேசங்களை வசப்படுத்தி பேரரசினை உருவாக்கிய சோழர் வலிமையை எடுத்தியம்பும் வகையில் ஒரு காணொலி காட்சிப்படுத்தப்பட்டமையானது வந்திருந்த அனைவரினது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. (Video link https://youtu.be/-jjjSpNQutE)

மில்ரன்கீன்ஸ் நடன ஆசிரியை திருமதி. சியாமா சொரூபநாதன் அவர்களின் மாணவிகளான நடன நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்றது.

“சக்கரக்கட்டி” எனத் தொடங்கும் ‘தைப் பொங்கல்’ பாடலானது பிரித்தானிய தமிழர் பேரவையின் கலைப் பிரிவால் உருவாக்கப்பட்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவில் பெருமையுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பாடல் ஈழப் போரினால் பாதிக்கப்பட்ட இரு கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இப் பாடலை எழுதியவர் தமிழீழத்தின் கலைஞர் திரு. தூ.வீரா அவர்கள் ஆவார். பாடலை இசையமைத்தவர் தமிழீழத்தின் கலைஞர் இசைப்பிரியன் ஆவார். வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி, அவர்களை உள்வாங்கி பாடப்பட்ட இப் பாடல், உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டிய கடமை இருப்பதை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

மேலும், ‘Voice Art’ மாணவர்களால் ‘மகளி’ என்ற பாடல் பெண்களை முதன்மைப்படுத்தும் பாடலாகப் பார்க்கப்படுகின்றது. இப் பாடலை இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகரும், பாடகருமான திரு. ஜீ.வி.பிரகாஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். இப் பாடலை ‘Voice Art’ பிரித்தானியா பாராளுமன்றத்தில் பெருமையுடன் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றியுரையுடன் இந் நிகழ்வானது சிறப்பாக நிறைவுற்றது.

திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத்தமிழர் உறவுப்பாலம்

https://www.britishtamilsforum.org/portfolio_item/a-bridge-of-relations-between-india-ealam-tamils/

Please follow and like us:
error

Comments are closed.