பிரித்தானிய பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் தின விழா!

பிரித்தானிய தமிழர் பேரவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானியாவில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் தின விழாவினை சிறப்பாக கொண்டாட உள்ளது. இந் நிகழ்வில் கடந்த காலங்களை விட அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

பிரித்தானியத் தமிழர் பேரவை  ஹரோ உள்ளூராட்சி சபையுடன்  இணைந்து முதன்முதலாக பிரித்தானியாவில் தைப்பொங்கல் தினத்தை 2011ஆம் ஆண்டு கொண்டாடியது. இதன் மூலம் தைப்பொங்கல் தினத்தை முக்கியமான அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கான கால்கோள் இடப்பட்டது.  அதன் பின்னர் சீரும் சிறப்பும் வாய்ந்த  தமிழ் மக்களின் மரபினை தமிழ் இளையோருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற முடிவுடன் வருடா வருடம் தை பொங்கல் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை உள் அரங்கத்தில் கலை பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றி வந்தது.

இதனைத் தொடர்ந்து கனடாவில்  குறிப்பிடத் தக்க மாநகர சபைகள் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக அங்கீகரித்தன.  அதன் தொடர்ச்சியாக ஒட்டாவா மாநில அரசும்  கனடிய அரசாங்கமும் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக  பிரகடனப்படுத்தின.

இந் நிகழ்வை மேலும் ஒரு படி முன்னகர்த்தி 2018ஆம் ஆண்டு முதன்முறையாக பிரித்தானிய தமிழர் பேரவையால் பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொண்டாடப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக இன்று வரை ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பாராளுமன்றத்தில்   பிரித்தானிய தமிழர் பேரவை தைப்பொங்கல் நிகழ்வை நடாத்தி வருகின்றது.  கொரோனா பொது முடக்க காலப் பகுதியிலும் தைப்பொங்கல் தினம் எந்தவித முடக்கமும் இன்றி மெய் நிகர் காணொளிக்கூடாக (Virtual event) பிரித்தானிய தமிழர் பேரவையால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதே காலப்பகுதியில் ரெட்பிரிட்ஜ் (Redbridge),  கிங்ஸ்டன் (Royal Borough of Kingston),  சௌதேர்க் (Southwark), (Barnet)  மற்றும் சட்டன் (Sutton) ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் தை மாதத்தை  தமிழ்  மரபுரிமை மாதமாக  அங்கீகரித்துள்ளன. 2021  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி லண்டன் மாநகர அவை (London Assembly)  தை மாதத்தை  தமிழ்  மரபுரிமை  மாதமாக பிரகடனப்படுத்தியது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் முயற்சியை பின்பற்றி இன்று   பிரித்தானியாவில் பல தமிழமைப்புகள் பல இடங்களில் தைப்பொங்கல் நிகழ்வை பல்வேறு மட்டங்களில் கொண்டாடி வருவதை  பிரித்தானியா தமிழர் பேரவை தமது முயற்சியின் ஒரு வெற்றியாகவே பார்க்கின்றது.

பல்வேறு இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை வாழ்த்தி வரவேற்கும் அதே வேளையில் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்றின் உள் அரங்கத்தில் 17 ஜனவரி 2023 நிகழவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் – தைப்பொங்கல் நிகழ்வு என்பது தனிச் சிறப்பானதாக அமைய உள்ளது. நாம் வாழும் இந்த நாட்டில் தமிழர் மரபுத் திங்களை உத்தியோகபூர்வமானதாக பிரகடனப்படுத்த பிரித்தானிய தமிழர் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ் மக்களின் பேராதரவினை வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து ஏனைய உள்ளூர் ஆட்சி மன்றங்களில் தை மாதத்தை தமிழ் மரபுரிமை  மாதமாக அங்கீகரிப்பதற்கு தேவையான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இதற்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு   பிரித்தானியத் தமிழர் பேரவை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

 

Thai Pongal Tamil Press Release 2023

Please follow and like us:
error

Comments are closed.