தமிழர் தாயகத்தில் அவசர கால அடிப்படையில் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும்
பிரித்தானிய தமிழர் பேரவை திட்ட முன்மொழிவு
1983இலிருந்து போர்ச் சூழலினால் இந்தியாவிற்கு அகதியாக சென்ற தமிழ் மக்களின் அவல வாழ்க்கையினைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து இந்தியாவுடனும், மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவு தரும் சில மேற்குலக நாடுகளுடனும் அவர்களின் மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும் போரால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் மீள் நிர்மாணம் (Reconstruction) ஆகிய இரண்டையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஒரு தசாப்தத்திற்கு மேலாக இடை விடாத தொடர்பாடலை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருவது பலர் அறிந்த விடயம் ஆகும்.
இதுவரை இருந்த சிறிலங்காவின் அனைத்து அரசுகளும் இது குறித்து பாராமுகமாக இருந்தது மட்டும் அல்லாது தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு பல முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி வந்ததனை ஆதாரங்களுடன் மேற்படி அதிகார மையங்களிடம் முன் வைத்து அழுத்தங்களை பாவிக்க கூறி வந்தோம்.
தமிழ் மக்களின் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் போருக்கு பிந்திய மிக முக்கியமான விடயமாக அவசர கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.
இது குறித்து சிங்கள தரப்புகள் மட்டும் அல்லாது தமிழர் தரப்பிலும் கூட கவனத்தில் எடுக்காதது மிகுந்த விசனத்துக்குரியது. ‘அரசியல் தீர்வு ஒன்று வரும் வரை காத்திருப்போம்’, என பெரும் பாதிப்புக்குள்ளான ஒரு பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினையைத் தள்ளிப் போடுவது பொறுப்பற்ற செயலாகும்.
இந்தோ லங்கா உடன்படிக்கையின் ஒரு முக்கிய அங்கமாக மீள் குடியேற்றம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தாது இழுத்தடித்து, “எண்ணிக்கை சிறுபான்மையினராக” (numerical minority) தமிழர் தாயகத்திலேயே தமிழ் மக்களை பலவீனப்படுத்தவே சிங்கள அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என நாம் பல்வேறு தளங்களில் பல்வேறு நாடுகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தமிழ் மக்களின் அவல வாழ்க்கையினை விளங்கப்படுத்தி வருகின்றோம்.
இதே வேளையில் “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.” என சிறிலங்காவின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றில் கதைத்திருப்பதாக அறிய வருகின்றோம். (வீரகேசரி https://www.virakesari.lk/article/222965.)
தமிழர் தாயகத்தின் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், சிவில் சமூகம், புலமையாளர்கள், பொறுப்புணர்வுடன் செயல்படும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஒரு முன்மொழிவினை கொடுத்து வினைத் திறனுடன் நேர்மையாக இதனை நடைமுறைப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனிதாபிமான பணிகளை அவசர கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த தமிழ் மக்களின் இருப்பினில் உண்மையான அக்கறை உள்ளவர்களுடன் இணைந்து செயல்பட பிரித்தானிய தமிழர் பேரவை விரும்புகிறது.
மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும் மீள் நிர்மாணம் (Reconstruction) குறித்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் குடிசார் அமைப்புகள் சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் பிரயோகிக்க முன் வர வேண்டும்.
தமிழர் தாயகத்தில் அவசர கால அடிப்படையில் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் – BTF
Comments are closed.