ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணமும் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதன் முக்கியத்துவமும்.
“செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன. உயர்ஸ்தானிகரின் விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடலின் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன், எதிர்வரும் செப்ரெம்பர் மாத ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில், நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்குமென நாம் நம்புகிறோம்.”
ஜூன் 2025இன் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திரு. வோல்கர் துர்க் (Mr Volker Turk) அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார். இதன் இன்றியமையாத முக்கியத்துவத்தை பிரித்தானிய தமிழர் பேரவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களைக் காணவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் இது ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் A/HRC/46/1, A/HRC/51/1 மற்றும் A/HRC/57/1 தீர்மானங்களுக்கு இணங்க அதன் கட்டாய விதிகளை (mandatory provisions) பலப்படுத்துவதற்காக, ஐ.நா. இன் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு (OSLAP) பிரித்தானியா தமிழர் பேரவையினால் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அடையாள வழக்குகளிற்கான (Emblematic cases) சாட்சிய கோப்புகளில் “செம்மணி மனிதப் புதைகுழி” மற்றும் “கிருஷாந்தி குமாரசாமி கொலை” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மனித உரிமை ஆணைக் குழு உயர்ஸ்தானிகர் திரு. வோல்கர் துர்க் அவர்கள், ஜூன் மாதத்தில் 3 நாள்கள் சிறிலங்காவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதையும், அத்துடன் அவர் தமிழர்களின் தாயகமான திருகோணமலைக்கு மட்டுமே செல்லவுள்ளார் என்பதையும் அறிந்தவுடனே பிரித்தானியா தமிழர் பேரவை, 27 மே 2025 அன்று உயர்ஸ்தானிகருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை அனுப்பியது (கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). அதில் செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில் செம்மணி புதைகுழியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, பச்சிளங் குழந்தைகள் உட்பட உடைகள் நீக்கப்பட்ட 17 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உயர்ஸ்தானிகர் திரு. வோர்கர் துர்க் அவர்கள் செம்மணிக்கு நேரில் சென்று பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை உறுதிப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதென்பது தவிர்க்க முடியாததாகும்.
இந்தத் தருணத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை உயர்ஸ்நானிகருடன் மேற்கொண்டிருந்த சில தொடர்பாடல்களை மீண்டும் வலியுறுத்துவது இன்றியமையாததாகும்.
- 22 ஜூலை 2024 தேதியிட்ட கடிதம் – ஐ.நா. நிறுவனங்களின் பெரும் தோல்வியை எச்சரித்து, “சிறிலங்கா மாதிரி” (Sri Lankan Model) என்பது இரக்கமற்ற நாடுகள் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் ஒரு சர்வதேச முன்னுதாரணமாக மாறியுள்ளது. இது சிறிலங்காவை அதன் “மோசமான மாதிரியிலிருந்து” (bad model) ஒரு “நல்ல மாதிரியாக” மாற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகள் “சிறிலங்கா மாதிரி” என்ற மூலோபாயத்தினை பின்பற்றுவதற்கு ஒரு தடையாக (deterrence) அமையும்.
- 16 செப்டம்பர் 2024 தேதி மின்னஞ்சல் – 2024 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான மந்தமான முன்னேற்றம் குறித்து தமிழ் மக்களின் கவலைகளை வெளிப்படுத்துகின்றது.
- 10 மார்ச் 2025 தேதியிட்ட கடிதம் – NPP (JVP) தலைமையிலான புதிய அரசாங்கத்தைக் குறிப்பிட்டு, அதன் சிங்கள அடிப்படை வாதக் கொள்கைகளை மேற்கோள் காட்டி, சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையை அமைப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.
- 27 மே 2025 தேதியிடப்பட்ட கடிதம் – பிரித்தானியா தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகரின் 2025 ஜூன் விஜயம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும், உள்நாட்டு போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையைக் காணவும், முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் “சுத்தமான சிறிலங்கா” என்ற போர்வையில் மனித உரிமைகளை மதிப்பதில் நீதியான பாதையை எடுத்து வருகிறது என்ற பொதுவான கருத்தை ஏற்று உயர் ஸ்தானிகர் அல்லது சர்வதேச சமூகம் ஏமாறக் கூடாது. ஐ.நா. தகவல் களஞ்சியத்தில் (UN Repository) ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உண்மை தகவல்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்து சாதுர்யமாக கையாள வேண்டும். தற்போதைய NPP அரசாங்கம் அதன் உள்ளக குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறையின் மூலம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்கும் என்று நம்பி ஐ.நா. அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தங்களை கைவிட்டு விடுமோ என்று தமிழ் மக்கள் கவலைப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தபடுத்திய ஐ.நா. உயர் ஸ்தானிகரின் கலந்தாலோசனைகள், செப்டெம்பரில் வரவுள்ள OSLAP இன் இறுதி அறிக்கை மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களுடன், 2025 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 60வது UNHRC அமர்வு, தமிழர்களுக்கு நீதி, தீவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான பாதையை வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
முக்கிய குறிப்புகள்:
- சிறிலங்காவின் கொலைக் களங்கள் (Killing Fields), மனிதப் புதைகுழிகள் (Mass Graves), மறைக்கப்பட்ட சித்தரவதை மையங்கள், சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியம் போன்றனவற்றை உலக சமுதாயம் கவனிக்கச் செய்வதற்கான உயர்ஸ்தானிகருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.
- சிறிலங்காவின் கடந்த 77 ஆண்டுகால வரலாற்றின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறையால் (international criminal justice mechanism) மட்டுமே மோதலின் வடிவங்களையும் மூல காரணங்களையும் அடையாளம் காண முடியும் என்பதையும், இலங்கையில் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வன்முறை சுழற்சி மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதையும் ஐ.நா மற்றும் பிற சர்வதேச சமூகங்கள் ஒப்புக் கொள்ளும்.
நன்றி.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணம் Fn2
May 2025 Letter to His Excellency Mr Volker Turk
Comments are closed.