மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்ததற்காக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பிரித்தானிய அரசாங்கத்தை வரவேற்று பாராட்டுகின்றது.
உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகளின் கீழ் மாக்னிட்ஸ்கி பாணியிலான (Magnitsky style) தடையை அமல்படுத்தவும், (1) இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, (2) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, (3) இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் (4) துணை இராணுவக் குழுவின் முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் (கருணா குழு) ஆகியோருக்கு எதிராகப் பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்குவதற்காக எடுக்கப்பட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவினைப் பாராட்டுகிறோம்.
பிரித்தானியாவில் 2024 இல் நடந்து முடிந்த தேர்தலின் போது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒரு பகுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் ரைட் ஹானரபிள் சேர் கெய்ர் ஸ்டார்மர் (Rt Hon Sir Keir Starmer MP) மற்றும் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் ரைட் ஹானரபிள் டேவிட் லாமி எம்பி (Rt Hon David Lammy MP) ஆகியோருக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியானது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது. https://www.youtube.com/watch?v=6aFa36ZY61E). அத்துடன் இலங்கையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி சட்டத்தை பிரயோகித்தமைக்காக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
அமெரிக்காவின் “மாக்னிட்ஸ்கி சட்டம்” போன்ற சட்டத்தைப் பயன்படுத்தி, பிரித்தானியா தமிழர் பேரவை, பிரித்தானியாவில் வசித்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் அமைப்புகளின் பத்து வருட காலத்திற்கும் மேலாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சர்வதேச நீதி விசாரணைக்காக, தொடர்ச்சியான கோரிக்கைகளை ஐ.நாவில் முன் வைக்க எம்முடன் தொடர்ந்து பயணித்த பல அரசியல்வாதிகளுடன், குறிப்பாக முன்னாள் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ரைட் ஹானரபிள் தெரசா வில்லியர்ஸ் (The Rt Hon Theresa Villiers), ரைட் ஹானரபிள் சேர் ஸ்டீபன் டிம்ஸ் எம்.பி. (The Rt Hon Sir Stephen Timms MP), ரைட் ஹானரபிள் வெஸ் ஸ்ட்ரீட்டிங் எம்.பி. (The Rt Hon Wes Streeting MP), ரைட் ஹானரபிள் சேர் எட் டேவி பாராளுமன்ற உறுப்பினர் (Rt Hon Sir Ed Davey) ஆகியோர் குறிப்பிடப்படக் கூடியவர்கள். இலங்கையில் அட்டூழியக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டைப் (Universal Jurisdiction) பயன்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர்கள் மீண்டும் மீண்டும் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
2020 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் விஜயம் செய்த தெரசா வில்லியர்ஸ், அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சட்டத்தை முன்வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு உறுதியளித்தார். இதன் விளைவாக ஜூலை 2020 இல் உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள் (Global Human Rights Sanctions Regulations) உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலுக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதிக்காக போராடும் அதே வேளை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு போன்ற அட்டூழியக் குற்றங்கள் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை BTF தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
மார்ச் 2009இலிருந்து ஐ.நா.மனித உரிமை கழகத்தில் (UNHRC) BTF இன் தொடர்ச்சியான முயற்சிகள், அங்கு மேற்கூறிய அரசியல்வாதிகள் மற்றும் எம் சகோதர அமைப்புகளுடன் இணைந்து எடுத்த காத்திரமான நடவடிக்கைகளின் விளைவாக மார்ச் 2021 இல் HRC/RES/46/1 எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2022 இல் HRC/RES/51/1 என்ற மேலும் வலுவூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை (OSLAP) நிறுவி செயல்பாடுகளை தொடங்கின.
OSLAP இற்கு வழங்கப்பட்ட ஆணை (Mandate), மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான (1) எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கும், (2) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்காக வாதிடுவதற்கும், (3) தகுதி வாய்ந்த நியாயாதிக்கத்துடன் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் (5) தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றனவாகும். அத்துடன் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களையும் OSLAP இற்கு தொகுத்து அனுப்பி வைக்க முடியும்.
இதன் விளைவாக, ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட OHCHR இன் இடைக்கால அறிக்கை (HRC/57/19), இலங்கை ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட பல மனித உரிமை மீறல்களை OSLAP இன் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு சுட்டிக் காட்டியது. 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கெதிராக 156 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கொலைகள் உட்பட இனவழிப்புத் தொடர்பான சாட்சியங்கள், குறிப்பாக கறுப்பு யூலை, செம்மணிப் படுகொலை போன்ற குற்றங்களுக்கு நேரடிச் சாட்சியாக இருப்பவர்கள் OSLAP உடன் அல்லது எம்முடன் (BTF) உடன் தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறாக நாம் இனவழிப்பு குற்றங்களைத் தொகுத்து வழங்க முடியும்.
2024 செப்டெம்பர் மாதத்தில் (OSLAP) தனது வசமுள்ள முக்கியமான அடையாள வழக்குகளை (emblematic cases) உள்ளடக்கிய தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, 2025 செப்டெம்பரில் நடைபெறவுள்ள 60வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது கொண்டு வரவிருக்கும் புதிய தீர்மானம் இலங்கை அரசாலும் பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் அளவையும் அதன் பாதிப்புகளையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OSLAP இற்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் நீதித்துறை பொறிமுறைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான தகவல்களை வழங்க OSLAP தயாராக உள்ளதானது, ஒரு முக்கியமான சாதகமான அம்சமாகும்.
இவ்வாறாக சர்வதேச தளங்களில் தமிழ் மக்கள் எடுத்த முக்கியமான நகர்வுகளின் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் மீது அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
உலகளாவிய மனித உரிமைகள் விதிமுறைகள் 2020 இன் (Global Human Rights Sanctions Regulations) கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இங்கிலாந்து அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பல நாடுகளை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என்பன அதனை பின்பற்ற ஊக்குவிக்கும். இது குறித்து மேற்படி நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
Reference:
Sri Lanka on alarming path towards recurrence of grave human rights violations – UN report
Accountability central to Sri Lanka’s future – UN Human Rights report
https://www.facebook.com/share/1BWWBKDasQ/
https://x.com/wesstreeting/status/1237394176460746755?t=uVM9hlUnlKHANF–JAyl2Q&s=08
https://youtu.be/__D-0UNOT1w?si=FkBcEbQIFlZGaWbP
Comments are closed.