பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய வெளிநாட்டு விவகாரங்கள் காரியாலயத்தின் சிறிலங்கா விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 பேர் தொடர்பான விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களது உறவினர்களும் படும் அவலத்தினைக் கருதி போர் முடிந்த சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது விடுதலை தொடர்பாக பிரித்தானிய அரசு சிறிலங்காவிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.
1971ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டு ஜே.வி.பியினர் நடாத்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்த சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு மட்டும் வேறுபாடு காட்டுவது அவர்கள் கூறும் நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி என்ற விடயங்களுக்கு சம்பந்தமற்றது. இந்த விடயத்தில் கூட சரியான முடிவெடுக்க முடியாத சிறிலங்கா அரசு எதிர் காலத்தில் எவ்வாறு ஏனைய விடயங்களில் சரியான முடிவுகளை எடுக்கும் என்று வினாவப்பட்டது.
2009 யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் குழந்தைகள், முதியோர் உட்பட 18,000க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், அதில் ஒரு சிறிய பகுதியினரே விடுதலை செய்யப்பட்டனர், இது வரையும் விடுதலை செய்யப்படாதோருக்கு என்ன நடந்தது? என்பதை எமக்கு அறிய தரவேண்டும், அதற்கான அழுத்தங்களை பிரித்தானிய அரசு இலங்கை மீது பிரயோகிக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 18,000 பேரின் விபரங்களை வெளிவிடுமாறு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகின்ற போது அதிலிருந்து விடுபடுவதற்காக 217 பேர் மட்டுமே தன்னிடம் இருப்பதாகக் காட்டி ஏனையோரின் விபரங்களிற்கு பதிலளிக்காமல் நழுவப் பார்கின்றது என்ற விடயமும் முன்வைக்கப்பட்டது.
பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கு பதிலளித்த அதிகாரிகள் தாமும் இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதுவரும் இவை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் தொடர்பு கொள்வதாக உறுதியளித்தனர்.Press Release 21.11.2015
Please follow and like us:
Comments are closed.