இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஒரு கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளாகிய நாம் ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ள இனப் படுகொலையாளியான இலங்கையின் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகார வரம்பு நீதியினை (Jurisdictional Justice Provisions) பிரயோகித்து, இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிலைமாறுகால நீதியின் ஒரு படி முன்னேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐக்கிய இராச்சியத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். நவம்பர் 01 திகதி கிளாஸ்க்கோவில் (Glasgow) நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட உலகளாவிய அளவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குகிறோம்.
அப்பட்டமான மகாபாதக மனித உரிமை மீறல்களாலும், ஒருதலைப்பட்சமான பாராளுமன்ற அரசியல் அமைப்பாலும் வன்முறையற்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை மறுத்ததாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தமிழினப் படுகொலையை மையமாக வைத்து அரச ஆதரவுடன் நடைபெறும் மிருகத்தனமான கொடுமைகளைத் தாங்க முடியாமல் இலங்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களால் ஆனது தான் புலம்பெயர் அமைப்புகள் என்பதை இத்தால் குறிப்பிட விரும்புகிறோம். எஞ்சிய 3 மில்லியன் தமிழர்கள் இன்னும் அரச கட்டமைப்புக்குளான இனப்படுகொலைகளை இன்னும் தாயகத்தில் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழர்களின் காணிகள் தொடர்ந்தும் இராணுவ மையங்கள் அமைப்பதற்கும் தெற்கிலிருந்து சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) போன்ற கொடூரமான சட்டங்களினால் நசுக்கப்பட்டும் சுதந்திரமானதும் நம்பகரமானதுமான நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டும் வருகின்றது. இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமாறுகால நீதி மூலம் ஒரு கண்ணியமான நீண்ட கால அரசியல் தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. அதனால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய எமக்கு மேற்கூறியவற்றை பெற்றுக் கொடுத்து முறையான நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட உதவ வேண்டிய கடப்பாடு உண்டு.
அத்துடன் அண்மையில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் மற்றுமொரு சர்வாதிகாரப் போக்காக அங்கு வாழும் பல்லின சமூகதின் மேல் அதிகாரம் செலுத்தும் வகையில், பல குற்றங்கள் புரிந்த, காணாமலாக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கான வழக்கின்போது நீதிமன்றத்தை மிரட்டி அவமதித்ததால் சிறை சென்று பின் சிறைக்காலம் முடியும் முன்பே ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டவருமான பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரோவை ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணிக்குழுவிற்கு தலைவராக நியமித்துள்ளார். இச் செயல் தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாண்டு காலமாக பாதுகாத்து வந்த மொழி, மதம், கலாச்சாரம் மற்றும் காணி உரிமைகளைப் பறிக்கும் நோக்கமாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஐக்கிய இராச்சியம் காலனித்துவ சக்தியாக இருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது தமிழர் தேசத்திற்கு கூட்டாட்சி உரிமையோ, பாதுகாப்போ, அரசியல் பகிர்வோ இல்லாமல் விட்டுச் சென்றதால் ஐக்கிய இராச்சியத்திற்கு இப்பொது ஒரு தார்மிக கடமை இருப்பதை உணர்த்தி நாம் முறையீடு செய்கிறோம். அத்தோடு 300,000 மேற்பட்ட தமிழர்கள் தற்போது இங்கு வாழ்வதால் இந்த முக்கியமான தருணத்தில் ஐக்கிய இராச்சியத்தின் தார்மிக கடமையை மேலும் வலியுறுத்துகிறோம்.
மேலும் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் GSP+ போன்ற பொருளாதார அந்நிய செலவாணியை கட்டுப்படுத்தி அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகிறோம். கடும்போக்குவாத கொள்கையுடைய சிறிலங்கா போன்ற அரசுகளுக்கு கண்ணியமான இராஜதந்திரம் ஒவ்வாது.
சிறிலங்கா தான் புரிந்த அப்பட்டமான மகாபாதகக் குற்றங்களை மூடி மறைக்க இராஜதந்திர முயற்சிகள் மூலம் பகீரதப் பிரயத்தனம் எடுத்தும், பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை வெளியிட மறுத்தும் அதே சமயம் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனக் கூறியும் நாடகமாடி வருகிறது. இத் தருணத்தில், நாங்கள் ஐக்கிய இராச்சியத்தினதும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கவனத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிஷேல் பச்லெற் அம்மையார் அவர்களால் 12 ஜனவரி 2021ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்பால் ஈர்க்கின்றோம். உயர் ஆணையாளர் பரிந்துரைத்த சர்வதேச நடவடிக்கைகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன:
- எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்காக சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஆற்றலினை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடவும், உறுப்பு நாடுகள் உட்பட தகுதியான அதிகார வரம்பைக் கொண்ட நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரித்தல்,
- வேற்று நாட்டு (extraterritorial) அல்லது உலகளாவிய நியாயாதிக்க தத்துவங்களின் அடிப்படையில் (universal jurisdiction), தாம் வாழும் நாடுகளின் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அமைவாக, சிறிலங்காவில் புரியப்பட்ட சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைத்தல்,
- சொத்து முடக்கம் (asset freeze) மற்றும் பயணத் தடைகள் (travel bans) போன்ற சாத்தியமான தடைகளை (targeted sanctions), பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் செய்ததாக நம்பகமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரயோகிப்பது பற்றி ஆராய்தல்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 2021 இல் நிறைவேற்றப்பட்ட A/HRC/46/1 தீர்மானம் கடந்த கால உள்நாட்டுப் பொறிமுறைகளின் தோல்வியையும், நடந்துகொண்டிருக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் எடுத்துக்காட்டுகிறது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதே தீர்மானம் ஐ.நா நிர்வகிக்கும் சாட்சிய சேகரிப்பு செயல்முறையின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வகுத்து பரிந்துரைக்க உயர் ஸ்தானிகரை பணித்துள்ளது.
எனவே, தமிழ் மக்களுக்கு எதிரான அதன் கட்டமைப்புரீதியான இனப்படுகொலையை தொடரும் சிறிலங்கா அரசை ஊக்கப்படுத்தி பாதுகாக்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து, சிறிலங்காவிற்கு எதிராகவும் இங்கு வருகை தந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி உட்பட போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகவும் விரைவான சர்வதேச நடவடிக்கை தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
குறிப்பு: இந்த கூட்டறிக்கை ஸ்காட்லாந்து COP26 மாநாட்டிற்கு சிறிலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் வருகையையிட்டு 31 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்ட ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் ஆகும்.
Contact details:
Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com
Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
National Council of Canadian Tamils (NCCT): +14168307703, info@ncctcanada.ca
Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net
Tamil Movement Against Genocide (Mauritius): +230 5811 2044, koomarenchetty@gmail.com
United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org
இனப்படுகொலையாளிக்கு அதிகார வரம்பு நீதியை பிரயோகிக்கவும் Final1
Comments are closed.