கீழ் குறிப்பிட்ட உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சிறிலங்கா அரசுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த சில அம்சங்கள் சம்பந்தமாக எமது கருத்தை தெரிவிக்க விழைகின்றோம்.
சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைச் சுழற்சி (Cycle of Violence) மற்றும் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நாங்கள் இங்கு பதிவு செய்கின்றோம். தாயகம் திரும்புவதற்கான எமது உரிமையை (Right to Return) நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகின்றோம். ஆகையினால் சிறிலங்காவிலுள்ள பல்லின, பல் மத சமுதாயங்கள் மத்தியில் சகவாழ்வினையும், நீண்ட கால அமைதியையும் ஏற்படுத்துவதற்கான அரசியல் தீர்வொன்றை உருவாக்குதல், மற்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்காளிகளாக ஈடுபட நாங்கள் விரும்புகின்றோம்.
மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுதல் சம்பந்தமாக நாங்கள் வாழும் நாடுகளிலுள்ள அரசுகளுடனும், உலகளாவிய ரீதியில் இரு தரப்பு, பலதரப்பு கொள்கை வகுக்கும் மையங்களுடனும் மேற்குலகுடனும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனும் எங்கள் அமைப்புகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்துள்ளன.
சிறிலங்கா தீவிலும் அதனைச் சூழவும் உள்ள பிராந்தியத்தில் தற்போது காணப்படும் பிராந்திய பதட்ட நிலையையும் மற்றும் மனித உரிமை அமைப்புகளினால் எச்சரிக்கப்பட்டபடி இத் தீவில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோசமான செல்நெறிகளையும் கருத்தில் கொள்கின்றோம். ஆகையினால் சிறிலங்காவில் பல காலமாக புரையோடிப் போயிருக்கும் தமிழ் தேசிய பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறும் இதற்கு நீதியான தீர்வொன்றை கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச சமூகத்தை நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்.
இது சம்பந்தமாக தமிழர் தரப்பிற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் ஐக்கிய அமெரிக்க அரசு மற்றும் இந்திய அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான முன்னெடுப்புகளை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். தமிழ் மக்களின் நீண்டகால நியாயபூர்வமான வேணவாக்களை (Legitimate Aspirations) பூர்த்தி செய்வதற்கான இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளினால் முன்னெடுக்கப்படும் அரசியல் பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் அதே வேளையில் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளின் தோல்விகளையும் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் சிங்களத் தலைவர்களினால் கிழித்தெறியப்பட்ட துரதிர்ஷ்ட வரலாற்றினையும் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆகையினால் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வெற்றிகரமான தீர்வொன்றினை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தம் (Arbitration) அவசியம் என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒருங்கிணைந்த மூலோபாய திட்டமொன்றை ஏற்படுத்துமாறும் இடம்பெறக் கூடிய பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்துவம் வகித்து தலைமை ஏற்குமாறும் ஏற்படக் கூடிய உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதனை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் உலக வல்லரசான அமெரிக்காவையும் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவையும் வேண்டிக் கொள்கின்றோம்.
அத்துடன் இம் முயற்சிகளை முனைப்புடன் ஆதரித்து, அவர்கள் வசமுள்ள அரசியல், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார கருவிகளை பாவித்து உறுதுணையாக இருக்குமாறும் நாங்கள் வாழும் நாடுகளான ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா முதலிய நாடுகளிலுள்ள அரசுகளை கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் எந்த தீர்வு முயற்சிகளிலும் உலகளாவிய தமிழ் புலம்பெயர் மக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களை பொருத்தமான பங்காளிகளாக அங்கீகரிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
Contact details:
Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com
Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
National Council of Canadian Tamils (NCCT): +14168307703, krishanthy@ncctcanada.ca
Norwegian Council of Eelam Tamils (NCET): +4790641699, stevenpush.k@gmail.com
Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net
United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org
தமிழ் புலம்பெயர் அமைப்புகள் பேச்சுவார்த்தையில் சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோருகின்றனர் Final (UNICODE)
Comments are closed.