மனித உரிமைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த மதிப்புக்குரிய முன்னாள் ஆயர் டாக்டர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு இறுதி அஞ்சலி

மதிப்புக்குரிய ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

உலக தமிழர்களுடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை (பிதபே) மதிப்புக்குரிய முன்னாள் ஆயர் டாக்டர் ராயப்பு ஜோசப் அவர்களின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் தங்கள் உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளின் பேரில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காகவும்நம்பிக்கையிழந்த மக்களுக்காக தனது இறுதி மூச்சு வரை ஆற்றி வந்த மனிதாபிமான சேவைகளுக்காகவும் மதிப்புக்குரிய ஆயர் அவர்கள் நீண்ட காலமாக நினைவு கூரப்படுவார். கைவிடப்பட்ட மக்கள் மீது நம்பிக்கை ஊட்டி யுத்தப் பாதிப்புக்கு உள்ளான ஆதரவற்றவர்கள் பலரை பராமரித்து வந்தார். மக்கள் சேவை மீது கொண்ட ஆர்வத்தினால், மதத்தின் எல்லைகளையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அவர் உழைத்து வந்தார்.

பி.த.பே இன் வேண்டுகோளின் பேரில், தொழில் கட்சியைச் சேர்ந்த பாசெட்லோ (Bassetlaw) தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிரபு ஜோன் மான் அவர்கள் (Lord John Mann) 2010இல் இலங்கைக்குச் சென்று போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு முக்கிய சாட்சியாக விளங்கிய மதிப்புக்குரிய ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை சந்தித்து வந்தார். 

பிரபு ஜோன் மான் அவர்கள் வடக்கில் தான் நேரில் கண்டு கவனித்தவற்றை எமக்கு விளக்கியதோடு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி (Lessons Learnt Reconciliation Commission) ஆணைக் குழுவிற்கு ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் அளித்த அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டு காணமால் ஆக்கப்பட்டோ கணக்கில் காட்டப்படாத 146,679 பேர் என்ற தொகையை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். 

ஆயர் அவரகள், மாவட்டரீதியான சிறிலங்கா அரச திணைக்களங்கள் வெளியிட்ட புள்ளி விபர தகவல்களிலிருந்து, யுத்த வலயத்தில் இருந்தவர்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு , கணக்கில் வராதோர் தொகை 146,679 என்ற எண்ணிக்கையை அறிவித்தார். ஆயர் அவர்கள் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்காக தொடர்ச்சியாக ஆதரித்து குரல் கொடுத்து வந்துள்ளார்.

ஆயர் அவர்களின் குணாதிசயங்கள் பற்றி பிரபு ஜோன் மான் தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிடுகையில், “அவர் மனித உரிமைகள், நீதி, கெளரவம் மற்றும் தனது மக்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றுக்காக முன்நின்றுழைத்த மகான்” என்று குறிப்பிடுகிறார்.

அவரது பிரிவு எமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய இன்றியமையாத மகத்தான சேவையை பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களுடன் இணைந்து,மிகுந்த நன்றியுடன் நினைவு கூரும்.  

மதிப்புக்குரிய முன்னாள் ஆயர் டாக்டர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு இறுதி அஞ்சலி 

 

Please follow and like us:
error

Comments are closed.