பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்ற இலங்கை மீதான விவாதம்

பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Backbench  Debate) பிரித்தானிய  பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான முயற்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினூடாக (APPG for Tamils) முன்னெடுத்து இருந்தனர். கடந்த 11ம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற இருந்த இவ் விவாதமானது பாராளுமன்றத்தின் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு தற்போது வரும் வியாழக்கிழமை 18 மார்ச் 2021 அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாட்டினை தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு உப தலைவர் சிவோன் மாக்டோனா (Siobhain McDonagh MP) அவர்களின் முன்னேற்பாட்டில் பிரித்தானிய தமிழர் பேரவையின் வேண்டுகோளின் பிரகாரம் அனுமதி கோரப்பட்டு அதன் பின்பு கொன்செர்வ்டிவ் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் எலியட் கோல்பேர்ண் (Elliot Colburn MP), மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உப தலைவர் சேர் எட் டேவி (Sir Ed Davy MP) அவர்களினால் அனுசரணை வழங்கப்பட்டு மேலும் பல அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் (Backbench Debate) நடைபெற உள்ளது. 

இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்ற அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை மீது மேற்கொள்ள வேண்டிய அழுத்தங்கள் மற்றும் இலங்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய ஆவணங்கள் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்பதனையும் தமிழர்களுக்கான ஒரு வலிமையான அரசியல் தீர்வினை பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை, இன அழிப்பு போன்ற மோசமான குற்றமிழைத்தவர்கள் மீது பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவை உள்ளடங்கலாக பல விடயங்கள் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விவாதத்தில் பங்கு பற்றி மேற்படி விடயங்களை முன்வைக்குமாறு ஏற்கெனவே தமிழர்கள் வாழும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்ற இலங்கை மீதான விவாதம் 17 03 2021 (FINAL)

Please follow and like us:
error

Comments are closed.