ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் அவர்களுடனும் நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் (Hon. Stephen Kinnock) அவர்களுடனும், நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் (Wes Streeting) அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் மிகுந்த ஆக்கபூர்வமான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் இலங்கைவாழ் தமிழர்களுக்கான நீதி, சமாதானம், சுபீட்சம் என்பனவற்றை அடைந்து கொள்வதற்கான எமது கரிசனைகள் பற்றியும் கூட்டாக எடுத்துரைத்தோம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை தடுப்பதற்கு வலுவான உறுதியான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது அதியுயர் முன்னுரிமையாகும் என்பதனை எடுத்துரைத்தோம். சிறிலங்கா உட்பட எல்லா இடத்திலும் மனித உரிமைகள் பாதுகாப்புக்கும் அவற்றின் மேம்பாட்டுக்கும் கீர் ஸ்ராமர் (The Rt Hon Keir Starmer) அவர்களின் தலைமையின் கீழ், தொழிற் கட்சி முக்கியத்துவம் கொடுக்குமென ஸ்டீபன் கின்னொக்கும் வெஸ் ஸ்றீரிங்கும் தெளிவுபடுத்தினர்.

பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் நிழல் அமைச்சர்களுக்குமிடையில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

  •  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தற்போதய ஆணையிலிருந்து இலங்கை பின்வாங்கியுள்ளமை.

•    குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை தொடர்தலும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் ஐநா காரியாலய அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அரச படைகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் சிவில் நிர்வாகம், பாராளுமன்றம் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் உயர் பதவிகளும் வழங்கியுள்ளமை.

•  பௌத்தமயமாக்கல், நில அபகரிப்பு, மேலதிக குடியேற்றம் ஆகியவற்றை தனி இலக்காகக் கொண்ட தொல்பொருள் பணிக் குழு ஒன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை.

•    அட்டூழியக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பாதிப்புக்குள்ளானவர்கள், சாட்சியமளிப்பவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சான்றுகள் பாதுகாக்கப்படல்

•    இலங்கையில் பாதுகாப்புத் துறையை சீர்திருத்தம் செய்வதற்காக ஐக்கிய இராச்சிய அரசினால் வழங்கப்பட்ட £6.6 மில்லியன் (பவுண்டுகள்) பணத்தினால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகள்.

•    சாட்சியங்களை பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேசப் பொறிமுறை உதாரணமாக: சிரியாவிற்கான சர்வதேச பக்கசார்பற்ற சுயாதீன பொறிமுறை (IIIM) அல்லது மியன்மாருக்கான சுயாதீன விசாரணை பொறிமுறை (IIMM).

•    சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை அமைத்தல்

•    இப்பிரச்சனைகளை ஐநா பொதுச் சபைக்கு அல்லது பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லல்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு காண்பதற்கான பொறிமுறைகளை வலியுறுத்தி தொழிற் கட்சியின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் பிரித்தானிய பாராளுமன்றில் உச்சக்கட்ட அழுத்தம் பிரயோகிப்பார்கள் என்றும் எதிர்கால தொழிற்கட்சி அரசானது மனித உரிமைகள் விடயத்தில் பூசிமெழுகாது காத்திரமான நிலையெடுத்து உரிமைகளை வழங்க ஆவன செய்வார்களெனவும் இது விடயத்தில் டேவிட் மிலிபான்ட் (The Rt Hon David Miliband) அவர்களும், எட் மிலிபான்ட் (The Rt Hon Ed Miliband) அவர்களும் ஆற்றிய வகிபாகத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வதோடு எம்முடன்  தோளேடு தோள் நின்று தொழிற் கட்சி செயலாற்ற காத்திருக்கிறது என உறுதிமொழி வழங்கினார்கள்;.

தொழிற்கட்சி சார்ந்த தமிழர்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர் சமூகத்தின் மீது காட்டப்படும் தொடர் ஆதரவுக்காக புலம்பெயர் தமிழர்கள் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை நிழல் அமைச்சர்களுக்கும் தொழிற் கட்சிக்கும் நன்றி தெரிவித்தது.

இலங்கை அரசாங்கத்தினால்  இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மீதான உண்மை நீதி மற்றும் வகைகூறலை உறுதி செய்வதற்காக ஐக்கிய இராச்சியம் தனது வெளியுறவுக் கொள்கையை முடுக்கிவிட்டு இலங்கையை  ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுசென்று அதன்மீது தீர்மானம் 30/1 (நிலைமாறுகால நீதி) நிறைவேற்றிட முன்னின்று செயற்பட்ட முன்னைநாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் (The Rt Hon David Cameron) அவரகளின் முயற்சிக்கும் பாராட்டுத் தெரிவித்தோம்.

Tamil press release 280620

Please follow and like us:
error

Comments are closed.