உலகத்தின் பார்வையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இது மனிதரால் இழைக்கப்பட பேரவலம் என்பதனை நாம் எம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட காலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தற்போது உலகெங்கும் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொறோனா பேரழிவின் விழிம்பில் நிற்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த மானுடத்தின் உயிர்வாழ்வு, எதிர்காலம் குறித்த எமது அக்கறையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு தமது உயிரை துச்சமாக மதித்து முன்னரங்கில் நின்று செயல்படும் அனைவரின் தியாகத்திற்கும் தலை வணங்குகின்றோம்.
மானுடத்தை பாதிக்கும் இந்த சூழலில் 11 வருடங்களுக்கு முன்னர் இன அழிப்பின் உச்சத்தை தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகள் உலகத்தின் மத்தியில் மறந்து விடலாகாது. ஈவிரக்கமற்ற சிங்களப் பேரினவாதிகளால் மனித விழுமியங்கள், சர்வதேச சட்டங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது அப்பாவி தமிழ் மக்கள் மீது தீயை உமிழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகத்தின் கண்முன் நினைவூட்டப்பட வேண்டியதும், நீதிகோரப்பட வேண்டியதொன்று.
ஓர் இனத்தை கொல்வது அல்லது அங்கங்களை சிதைப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல, அவ் இனத்தை தாம் வாழும் இடங்களில் வாழ முடியாத சூழலை உருவாக்குவதும் உள, உடல், ரீதியாக பாதிப்புகளை உருவாக்குவதும் இனப்படுகொலையே. தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உலகின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த 11 வருடமாக சர்வதேச நாடுகளிற்கூடாக அந்த இனப்படுகொலைக்கான நீதி வேண்டி சர்வதேச தளத்தில் குறிப்பாக ஐ.நா மனித உரிமைக் கழகத்தில் (UNHRC) நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் முற்றுமுழுதாக புறம்தள்ளி வெளியேறி விட்டனர். ஆயினும் சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளாத இவர்களின் வெளியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நாங்கள் மேலும் பலப்படுத்தி சர்வதேச நீதி பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு எங்கள் மக்ளுக்ககான பாதுகாப்பும் பரிகாரநீதியும் கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
அன்பான தமிழ் மக்களே! தற்போது உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தனிநபர் பாதுகாப்பு வலியுறுத்தப்படுவதனால் வழமை போன்று நாம் பொது வெளியில் நினைவேந்தல் நிகழ்விற்காக ஒன்று கூடுவது இம் முறை அனுமதிக்கப்படவில்லை. உலகெங்கும் எடுக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகளை மதித்து வாழும் தமிழ் மக்கள் இந்த வருடம் உலகெங்கும் இதயங்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூறுவோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை Zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் எங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கலந்தகொண்டு இதயங்களை இணைத்து ஒன்றாக அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை பிரித்தானிய தமிழர் பேரவை சக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றது. தற்போதைய நிலைமைகளில் மாற்றம் வந்தால் அதற்கேற்ற முடிவினை மீளாய்வு செய்து உங்களுக்கு அறியத் தருவோம்.
நினைவேந்தல் நிகழ்வுகலுடன் பொது அமைப்புக்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், மற்றும உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஆதரவாளர்கள் காணொளிகள், அறிக்கைகளினூடாக இனப் படுகொலைக்கு எதிராகப் போராடும் எம் மக்களுக்கான தம் ஆதரவினைத் தெரிவிப்பார்கள். உலகெங்கும் பரந்து வாழும் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் இணைந்து கொள்ள வேண்டுமென நாம் இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.
இது நீதிக்கான பயணத்தை மேலும் வலுப்படுத்தும். இது சம்பந்தமான மேலதிகமான தகவல்கள் பின்னர் அறியத் தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
02088080465
Please follow and like us:
Comments are closed.