இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமாகிய தா பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரும் துயர் அடைகின்றோம்.
நாடு மற்றும் நாட்டின் வளங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தன் இள வயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்து போராடிய நேர்மையான பெருந்தகையாக தா பாண்டியன் ஐயா அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்.
ஈழத் தமிழ் மக்களின் உற்ற தோழராக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன் ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் பலருக்கும் எம் இனத்திற்கேற்பட்ட வன்கொடுமைகளை புரிய வைத்த தா பாண்டியன் ஐயா அவர்களின் இழப்பு எமக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதனை முன்வைத்து தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாட்டு அமைப்புகளை வரவழைத்து கடந்த 2012ம் ஆண்டில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு பெரும் பங்காற்றினார். அத் தீர்மானத்தினை தமிழகத்திற்கும் எடுத்துச் சென்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தளங்களில் நீதி வேண்டி தொடர்ச்சியான முன்னெடுப்புகளை செய்தார்.
மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 2013ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். உலகில் சம உரிமை இல்லாமல் போராடும் மக்களுக்கு துணையாக நின்று தோள் கொடுக்கும் இவரின் இழப்பு இந்திய தேசத்திற்கு மட்டுமல்ல உழைக்கும் வர்க்கத்தினருக்கும், அடக்குமுறைக்கெதிராக போராடும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பு.
அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
- test
Comments are closed.