திருமதி ரோகிணி சிவகுருநாதன் எதிர் பிரித்தானிய தமிழர் பேரவை – வழக்கு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாடு குறித்த விளக்க அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை இந்த வழக்கு தொடர்பில் மிகுந்த கவலையுடன்  தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் சமத்துவ சட்டத்தின்கீழ் பேரவையின் தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தீர்ப்பு மூலம் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக வழங்க நேரிட்டுள்ளது. வழக்கு செலவு மற்றும் நட்டஈடு என்பவற்றினால் பிரித்தானிய தமிழர் பேரவை பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து சில தரப்பினரால் பிரித்தானிய தமிழர் பேரவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தீர்ப்பின் ஒரு சில வாசகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் இவர்களால்  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் அறிவோம். முழுமையாக தீர்ப்பு இன்னமும் பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய சூழ்நிலை இல்லாதிருப்பதை பயன்படுத்தி நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரங்கள் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த  பிரச்சாரங்களை கருத்தில் கொள்ளாமல் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான ஆவணங்களை முழுமையாக வாசித்து உண்மையை அறிந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை பொதுமக்களை அன்புடன் வேண்டி நிற்கின்றது.

இத்தகைய செயல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினதும் அவர்களது முகவர்களதும் நோக்கமான பிரித்தானிய தமிழர் பேரவையை சீர்குலைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாகவே அமையும்.

பிரித்தானிய தமிழர் பேரவையானது 2006ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காஅரசினால் யுத்த காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தக் குற்றங்கள்,மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்,இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என்பவற்றை சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தும் ஒரு முன்னணி அமைப்பாக இந்த அமைப்பு விளங்குகின்றது.மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசு மீதான விசாரணை கட்டமைப்பு என்பவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. ஸ்ரீலங்கா அரசு பிரித்தானிய தமிழர் பேரவை சீரழிக்கப்பட்ட வேண்டும்,அது ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இவற்றையெல்லாம் முறியடித்து பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் தனது நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச அரங்கத்தில் ஸ்ரீலங்கா அரசை பொறுப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே குறித்த நீதிமன்றத்தின் நடவடிக்கை காரணமாக பிரித்தானிய தமிழர் பேரவை பெரும் பொருளாதாதாரச் சிக்கலை சந்தித்து உள்ளது. இந்த தனிநபர் பிரச்சினையானது மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் ஊடாகவோ அல்லது கலந்துரையாடல் மூலமாகவோ தீர்க்கப்பட்டு இருக்கக் கூடிய ஒன்றாகும். தன்னார்வ அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவை தனது மனிதாபிமான பணிகளை முன்னெடுக்கும் அதேவேளை இது போன்ற ஒரு சில தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக மிகப்பெரும் செலவிலான நீதிமன்ற நடவடிக்கைக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.தன்னார்வ தொண்டு நிறுவனமானது தனது தொண்டர்களின் முழுமையான பங்களிப்போடு தனது மிகப்பெரும் இலக்கான ஶ்ரீலங்கா அரசின் பொறுப்புக் கூறலுக்கு பொறுப்பானவர்களை சர்வதேச சமூகத்தின் முன்நிறுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்வதை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. பெரிய இலக்கை எய்துவதற்கான நடவடிக்கைகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டுவரும் பிரித்தானிய தமிழர் பேரவையானது இந்த வழக்கின் காரணமாக மிகப் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேர்ந்துள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் தமது மனிதவள மேம்பாடு மற்றும் மனிதவள கையாளுகை தொடர்பாக தனிப்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கின்ற போதும் எம்மைப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அதற்கான தனியான ஒரு கட்டமைப்பை கொண்டு இருக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

பிரித்தானிய தமிழர் பேரவையானது ஒருபோதும் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தியது கிடையாது. 2010ஆம் ஆண்டின் சமத்துவ சட்டத்தின்படி நடவடிக்கையை எதிர்கொண்டு பிரித்தானிய தமிழர் பேரவை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருந்தது. பெண்களின் பங்களிப்பு பிரித்தானிய தமிழர் பேரவையில் அதிகளவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது பிரித்தானிய தமிழர் பேரவைக்கு மட்டுமே உரித்தான இயல்பு அன்று. இது போன்ற அனைத்து நிறுவனங்களிலும் காணப்படும் ஒரு அம்சமாகும்.சமூக காரணங்கள் மற்றும் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இதுபோன்ற சமத்துவமற்ற நிலைமை சகல அமைப்புகளிலும் காணப்படுகின்றது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட கூடிய சூழ்நிலை இருந்தபோதிலும் அது மிகப் பெரும் பொருள் செலவானது என்பதோடு நமது வளங்களை அது நோக்கி நகர்த்த வேண்டி ஏற்படும். அதனால் இந்த தீர்ப்புக்கு கட்டுப்படுவது என்றும் இதுதொடர்பாக மேன்முறையீடு செய்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.ஏனென்றால் இது வெறுமனே பொருட்செலவிலான ஒரு விடயமாக இருப்பதுடன் நமது வளங்களை வீண்விரயம் செய்வதாகவும் அமையும். நமது தொண்டர்களின் நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வைத்திருக்கும் நிலையில் அவற்றை நாம் விரயம் செய்துகொள்ள விரும்பவில்லை. நீண்டகால அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டு இன்னலுக்குள்ளாகியுள்ள எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் எமது இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்வது எமது முக்கிய பணியாகும்.

குறித்த தனிப்பட்ட உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கமானது வழக்கு நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. தொண்டர்களை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்படும் இதுபோன்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. எனவே இந்த சூழலில் நாம் தொடர்ந்தும் எமது இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிப்பதற்கு பொது மக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். இது தொடர்பில் நீங்கள் ஏதேனும் கலந்துரையாட விரும்பினால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தொண்டர்கள் இது தொடர்பில் கலந்துரையாட தயாராக இருக்கிறார்கள்.

Full link – வழக்கு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாடு குறித்த விளக்க அறிக்கை – 22.02.2019

Please follow and like us:

Comments are closed.