CALL US NOW +44 (0)208 808 0465
Donate Now
img_0994

இலங்கை தனது அறுபத்து ஒன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது! அந்த மண் எம் மக்களின் சொந்த மண்!

இலங்கை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு அறுபத்து ஒன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. தமிழ் மக்கள் தமக்கான சுதந்திரத்தை இன்னும் அடையவில்லை. காலனித்துவம் வர முன்னர் தமிழ் தேசத்திடம் இறைமை இருந்தது. காலனித்துவ ஆட்சி 1948இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது செயற்கையாக ஒருங்கிணைக்கப்பட்ட “சிலோன்” என்கின்ற ஒரு நாட்டினுள் நிரந்தர சிறுபான்மையாக அடக்கப்பட தமிழ் தேசம் நிர்ப்பந்திக்கப்பட்டது. எண்ணிக்கைரீதியிலான பெரும்பான்மையினை பயன்படுத்தி புதிய காலனித்துவ எசமான்களாக தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் தன் மேலாதிக்கத்தை திணித்தது. சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் மேலாதிக்கம் வழங்கி ஏனையவர்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிராகரித்தது.

சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும் இரத்தமும், கண்ணீரும், இனக் கலவரங்களும், இனவழிப்புமாக தமிழ் மக்கள் மீதான கொடுமைகள் நீண்டு செல்கின்றது. தமிழ் தேசத்தின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான அநீதிகளுக்காக ஒருவராவது சிங்கள மேலாதிக்க ஆட்சியினரால் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை.

முதல் முப்பது ஆண்டுகள் தமிழ் மக்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சை வழியில் சனநாயக முறைப்படி நீதி வேண்டிப் போராடினார்கள். இவையெல்லாவற்றிற்கும் இனக் கலவரங்கள் மற்றும் வன்செயல்களே பதிலாக சிங்கள தேசம் திருப்பியடித்தது. சகிக்க முடியாத ஒடுக்குமுறைகளை அனுபவித்த பின்னரே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் இறைமையை மீட்கும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை 2009இல் தமிழர் தேசம் மீது மிக மோசமான இன அழிப்பினைக் கட்டவிழ்த்து விட்டு குரூரமான முறையில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. “பயங்கரவாதத்திற்கெதிரான” யுத்தம் என்று போலிக் காரணத்தின் அடிப்படையில் சிங்கள தேசத்திற்கு ஆதரவளித்த சர்வதேச சமூகம் தமிழ் மக்களைக் காப்பாற்றாது தவறியதைக் காலம் கடந்து ஒத்துக் கொண்டது.

2009இலிருந்து வட கிழக்கு தமிழர் தேசத்தை சிதைக்கும் பன்முகப்பட்ட செயல்பாடுகளை சிறிலங்கா முடுக்கி விட்டது. தெற்கு சிங்கள மக்களைக் கொண்டு வந்து அமர்த்தும் நில ஆக்கிரமிப்புகள் துரிதப்படுத்தப்பட்டன. மொத்தமுள்ள 20 படையணிகளில் 15 படையணிகள் வட கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டு இராணுவமயமாக்கப்பட்டது. தமிழர் தம் சொந்தக் காணிகளில் மீள குடியேற முடியாத சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கில் சிங்கள மக்கள் சுதந்திர தினத்தினை கொண்டாடும் போது வட கிழக்கில் பல கிராமங்களில் தம் நிலங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாத தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து நீதி வேண்டத் தலைப்பட்டுள்ளார்கள். கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு கிராம மக்கள் தம் நிலத்திற்கு திரும்பிச் செல்லும் உரிமை வேண்டி அகிம்சைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

தமிழர்களுக்கெதிரான அநீதிகளை நீக்குவதாக வாக்குறுதி வழங்கி 2015இல் பதவிக்கு வந்த புதிய ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பு, இராணுவத்தினை அகற்றல், பாதுகாப்பு துறை சீரமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாக சர்வதேச சமூகத்தின் முன் போலி நாடகமாடுகின்றனர். அரசியல் கைதிகள் விடுவிப்பு, தனியார் காணிகளை மீளளித்தல், சரணடைந்து காணாமல் போனோர் குறித்த தகவல் பட்டியலை வெளியிடுதல், பயங்கரவாத தடை சட்டம் போன்ற இலகுவாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்களையே செயல்படுத்தாமல் காலம் கடத்தப்படுகிறது. கால காலமாக சிறிலங்கா அரசு இவ்வாறான தந்திரங்களை கையாண்டு வருவதனை தமிழ் மக்கள் நன்கறிவர். காலத்தினை இழுத்தடிப்பதனூடாக சர்வதேச சமூகத்தினையும் ஐ நா வையும் அயர்ச்சி அடையச் செய்து இலங்கையில் கவனம் குவிக்க விடாது அப்புறப்படுத்தி விடலாம் என்பதே சிறிலங்காவின் தந்திரமாகும். நிலப் பறிப்பு, மற்றும் பல மோசமான அநீதிகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் மக்களிற்கு நீதி வழங்கும் கடமையிலிருந்து சர்வதேசம் விலகக் கூடாது. நீதி கிடைக்காவிடில் மண்ணிலுள்ள தமிழ் மக்களின் போராட்டம் மேலும் விரிவடைந்து அப் பிராந்தியத்தின் ஸ்திர நிலமையைப் பாதிக்கும்.

2015 ஐ நா தீர்மானத்தில் (UNHRC Resolution 30/1) குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் சிறிலங்கா உடனடியாக நிறைவேற்ற பிரித்தானியா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ நா மனித உரிமைக் கழகம் என்பன தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை கேப்பாபுலவு போன்ற கிராமங்களில் தம் நிலத்தினை மீளக் கையளிக்குமாறு கோரிப் போராடும் மக்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும். புலம்பெயர் மக்கள் நாம், அவர்களின் நீதியான அகிம்சைவழிப் போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவினையும் பாதுகாப்பினையும் பெற்றுக் கொடுக்க காத்திரமான ஆக்கபூர்வமான நடவடிக்கைளில் செயல்படுவோம். இலங்கை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் தலைவர்கள் இராணுவத்திற்கெதிராக துணிந்து போராடும் நிலமிழந்த இம் மக்களுடன் உறுதியாகத் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் இராணுவம், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களின் நிர்மாணம் போன்றவற்றினூடாக சிறிலங்காவினால் கவரப்பட்ட தமிழர் தேசத்தின் நிலம் மீளக் கையளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்! செயல்படுவோம்!

அந்த மண் எம் மக்களின் சொந்த மண். மண்ணை மீட்டெடுப்பதில் மிகப் பெரும் தியாகம் செய்த எம் இனம் துணிந்து எழுந்து நிற்க புலம்பெயர் மக்கள் நாமே பாதுகாப்புக் கவசமாவோம்.

NEWSLETTER SIGN-UP

Sign-up to receive regular update from us.